குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்திய செல்போன் நிறுவத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம்
குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்திய செல்போன் நிறுவத்திற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதம்
மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு படையினர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-amp;ந்தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் தனியார் செல்போன் நிறுவனத்தில் 18 வயது பூர்த்தியடையாத வளரிளம் பருவ குழந்தை தொழிலாளரை பணியில் ஈடுபடுத்தியதற்காக ரூ.20 ஆயிரம் கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் அபராதம் விதித்துள்ளார். குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின்படி குழந்தை தொழிலாளரை அபாயகரமான தொழிலில் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை அல்லது ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து நீதிமன்றம் மூலம் விதிக்கப்படும். இந்த சட்டவிதிகளின்படி குழந்தைகளை பணிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் அபராதம் விதிக்க வழிவகை உள்ளது.
16 நிறுவனங்களில் ஆய்வு
மேலும் கரூர் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ் தலைமையில் கரூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் மணப்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளருடன் ஜூலை மாதத்தில் எடையளவுகள் மற்றும் பொட்டல பொருட்கள் விதிகளின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 16 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 7 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அதேபோன்று பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் 10 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் 4 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் 8 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதில் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 2 நிறுவனங்களின் மீது கேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முத்திரையிடாமல் பயன்பாட்டில் இருந்த மின்னணு தராசுகள் பறிமுதல் செய்து இசைவு தீர்வு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே தொழில் நிறுவனங்கள் தங்களது பயன்பாட்டில் உள்ள எடையளவுகளை ஆண்டிற்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்து முத்திரையிட்டு கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.