சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பணம் செலுத்திய பிறகும் விசா கொடுக்காத சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Update: 2023-03-14 18:45 GMT

நாகர்கோவில்:

பணம் செலுத்திய பிறகும் விசா கொடுக்காத சுற்றுலா நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

சுற்றுலா நிறுவனம்

குமரி மாவட்டம் பருத்திவிளையைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் தனது குடும்பத்தாருடன் ஒரு குழுவாக ரோம் செல்ல பணம் செலுத்தியிருந்தார். சுற்றுலா நிறுவனம் கோரிய அனைத்து ஆவணங்களையும் கொடுத்த பின்னரும் ரோம் செல்வதற்கு விசா எடுத்துக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் தாங்கள் செலுத்தியிருந்த பணத்தை திரும்ப தர வேண்டும் என சுற்றுலா நிறுவனத்திடம் பீட்டர் கேட்டார். ஆனால் பணம் திரும்ப கிடைக்கவில்லை.

இதனால் சம்பந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்துக்கு வக்கீல் மூலம் பீட்டர் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகும் உரிய பதில் இல்லை. இதைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான பீட்டர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட பீட்டருக்கு பயணம் செய்யாத கட்டணமான ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதை நஷ்ட ஈடுடாக பீட்டரிடம் வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்