புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்: 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் சேலத்தில் போலீசார் நடவடிக்கை

சேலத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது. இதன்படி ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதத்தை போலீசார் விதிக்க தொடங்கிஉள்ளனர்.

Update: 2022-11-03 20:25 GMT

சேலம், 

வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

மோட்டார்சைக்கிள்கள், மொபட், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்களில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்று விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்திஉள்ளது.

மொபட், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் 'ஹெல்மெட்' அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 'ஹெல்மெட்' அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் சென்னை உள்பட முக்கியமான நகரங்களில் புதிய அபராதம் விதிக்கும் நடைமுறை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலுக்குவந்துவிட்டது.

வாகன சோதனை

இந்த நிலையில் சேலம் மாநகரில் 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து புதிய பஸ்நிலையம், கலெக்டர் அலுவலகம், 5 ரோடு, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்பட முக்கிய இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனஓட்டிகளுக்கு அபராதம்விதித்தனர்.

நேற்று முதல் நாள் என்பதால் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணிந்து சென்றதை காண முடிந்தது. இதுதவிர, 'ஹெல்மெட்' அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்து இனிமேல் போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், 18 வயதுக்கு உட்பட்டவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், பைக் ரேசில் சென்றால் முதல் முறையாக ரூ.5 ஆயிரமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். சிக்னலை மதிக்காமல் செல்வோருக்கு முதல் முறை ரூ.500-ம், இரண்டாவது முறை ரூ.1,500 வசூலிக்கப்பட உள்ளது.

'ஹெல்மெட்' கட்டாயம்

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

போக்குவரத்து விதிகளை மீறினால் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புதிய அபராத தொகை வசூலிக்கப்படும். எனவே மொபட், ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாவிட்டால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகன ஓட்டிகள் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. எனவே, போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்