மாம்பழங்களை ரசாயனம் வைத்து பழுக்க வைத்தால் ரூ.1 லட்சம் அபராதம்

மாம்பழங்களை ரசாயனம் வைத்து பழுக்க வைத்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-11 19:00 GMT

ஆயக்குடி சந்தை

ஆயக்குடி சுற்று பகுதியில் மா, கொய்யா உள்ளிட்ட பழ சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இங்கு விளையும் பழங்கள் ஆயக்குடி சந்தையில் வைத்து விற்கப்படுகிறது. தற்போது மா சீசன் தொடங்கி உள்ளதால் ஆயக்குடி சந்தைக்கு டன் கணக்கில் மாங்காய்கள் வரத்து ஆகின்றன.

இந்த மாங்காய்களை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பழனிக்கு வரும் பக்தர்களை மையப்படுத்தி பழனி நகர், அடிவாரம் பகுதியில் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.

பழுக்க வைக்க ரசாயனம்

இந்நிலையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதற்கு கார்பைடு கல் போன்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்பு துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும் வியாபாரிகள் சிலர் ரசாயனம் கொண்டு பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பழனி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:-

பழனி பகுதியில் சரக்குவேனில் நேரடியாக பழ விற்பனை நடைபெறுகிறது. அவ்வாறு விற்பவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற வேண்டும் என நோட்டீஸ் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரும்பாலான விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுவிட்டனர்.

ரூ.1 லட்சம் அபராதம்

அதேபோல் ஆயக்குடி, பழனி பகுதியில் உள்ள பழ குடோன்களில் கார்பைடு கல், எத்திப்போ போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அப்போது ரசாயனம் பயன்படுத்தி மாம்பழம் பழுக்க வைத்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2 முறைக்கு மேல் தொடர் குற்றம் செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்