வருகிற 2, 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா

கொல்லிமலையில் ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரிவிழா நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-07-20 18:45 GMT

முன்னேற்பாடு கூட்டம்

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவதற்கான பணிகள் குறித்த முன்னேற்பாடு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் உமா பேசும்போது கூறியதாவது:-

கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த ஆண்டும் வருகிற ஆகஸ்டு மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது.

மலர் கண்காட்சி

இதையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில் காவல்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர்கண்காட்சியை பசுமை திருவிழாவாக சிறப்பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.

அரசு அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒரு முறை பயன்படுத்தபடும் பிளாஸ்டிக் பொருட்களை கட்டாயம் பயன்படுத்த கூடாது. மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில்வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும் மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் செல்வகுமரன், நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாகரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்