ஆஸ்பத்திரியில் குவியும் நோயாளிகள்; வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்

புதுப்புது பெயர்களில் தோன்றும் புயல் போன்று தற்போது புதிய புதிய பெயர்களில் தினம் ஒன்றாக பொதுமக்கள் மத்தியில் காய்ச்சல் அறிமுகமாகி வருகிறது.

Update: 2023-03-10 18:48 GMT

சுவாச தொற்று நோய்

உடல் வெப்ப நிலையை அதிகரிக்க செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது. இதனால்தான் வீடுகளில் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே பல அம்மாக்களுக்கு பீதி ஏற்படுகிறது.

காய்ச்சல் ஒரு சுவாச தொற்று நோய். இது மூக்கு, தொண்டை மற்றும் சில நேரங்களில் நுரையீரலை பாதிக்கும் 'இன்புளூயன்ஸா' என்ற வகை வைரசால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தசை வலி, சோர்வு, தலைவலி, இருமல் குறிப்பாக இரவில் அதிகரிக்கும் இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை புண், சோர்வு, மூச்சுத்திணறல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட வரலாம் என்கின்றனர்.

வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தை பொருத்த வரையில் கடந்த 60 நாட்களாக வைரஸ் காய்ச்சல் காணப்படுகிறது. இது பெரியவர்களை விட குழந்தைகளில் அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். ஆஸ்துமா, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நாட்பட்ட நிலைகளையும் இந்த வகை காய்ச்சல் மோசமாக்கிவிடுவதால் பொதுமக்களால் அஞ்சப்படுகிறது. பொதுவாக, உடலின் சராசரி வெப்பநிலையானது 98.6 டிகிரி பாரன்ஹீட். சிலருக்கு இதைவிட சற்று கூடவோ, குறைவாகவோ இருக்கலாம். வெப்பநிலையானது 100 டிகிரி வரை இருப்பது பிரச்சினையில்லை. அதை தாண்டினால்தான் கவலைப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வழக்கமாக காய்ச்சல் காலம் செப்டம்பரில் தொடங்கி நவம்பரில் உச்சத்தை எட்டும். டிசம்பர்-ஜனவரிக்கு பிறகு, நோயாளிகளின் எண்ணிக்கை மெதுவாக குறையும். ஆனால் இந்த ஆண்டு காய்ச்சல் சீசன் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து தொற்று பரவுகிறது.

நோயாளிகள் கூட்டம் அலைமோதல்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், எச்1என்1 பாதிப்பு காணப்பட்டது. வாரங்கள் பல கடந்த நிலையில், எச்3என்2 மற்றும் 'இன்புளூயன்சா' பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காண முடிகிறது. இப்போது, ரைனோவைரஸ் மற்றும் ஆர்.எஸ்.வி. (சுவாச ஒத்திசைவு வைரஸ்) போன்ற வைரஸ்களின் கலவையும் பரவுகிறது. இதனால் சராசரியாக தனியார் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நோயாளிகளையும், அவசரநிலையில் 10 நோயாளிகளும் வருகின்றனர்' என்று தொற்று நோய்கள் ஆலோசகர்களும் கூறுகின்றனர்.

வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.

2 பேர் பலி

நாடு முழுவதும் 'எச்3 என்2' வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்த காய்ச்சலுக்கு அரியானாவில் ஒருவரும், கர்நாடகாவில் ஒருவரும் பலியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே காய்ச்சல் ஏற்பட்டால் உடனே டாக்டரை அணுக வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி உள்ளது. இதற்கிடையே வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை சாதாரண காய்ச்சல் சிகிச்சைக்கு தினமும் சுமார் 50 பேர் வரை சிகிச்சை பெறுவதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். தற்போது பரவிவருகிற வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை. இருப்பினும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. போதுமான மருந்து, மாத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரத்துறை மூலம் காய்ச்சல் பரிசோதனைக்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்கள் தரப்பிலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

தனி வார்டு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பூவதி:- புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 படுக்கைகள் வரை போடப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு என்பது இல்லை. மருத்துவமனையில் காய்ச்சலுக்காக உள் நோயாளிகளாக சிகிச்சையில் யாரும் இல்லை. தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பயப்பட தேவையில்லை

புதுக்கோட்டையை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் கோகுல ரமணன்:- வைரஸ் காய்ச்சல் உள்ளவர்கள் இருமல், தும்மல் அல்லது பேசும் போது ஏற்படும் நீர்த்துளிகளால் பரவுகிறது. மூக்கு ஒழுகுதல், வறட்டு இருமல், உடல் வலி, காய்ச்சல் ஆகியவை தான் வரும். இந்த காய்ச்சல் பாதிப்பு 2 அல்லது 3 நாட்கள் இருந்து சரியாகிவிடும். யாரும் பயப்பட தேவையில்லை. கைகளை சுத்தமாக கழுவுதல், முக கவசம் அணிதல் நல்லது. இதய நோய், நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உடையவர்கள், முதியவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறலாம். குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலால் பாதிப்பு அதிகம் இல்லை. சில குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். அந்த குழந்தைகளை எச்சரிக்கையுடன் கவனமாக கவனித்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தண்ணீர் குடிப்பதற்கு சுடுதண்ணீர் கொடுக்க வேண்டும். குழந்தைகள் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் செய்யப்படுகிற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் குழந்தைகளுக்கு உணவுகள் வாங்கி கொடுப்பதை தவிர்க்கலாம்.

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம்

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா:- புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளோடு சித்த மருத்துவம் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன. சாதாரண காய்ச்சல் சிகிச்சைக்காக தினமும் பொதுமக்கள் வருவது உண்டு. தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்கு இதுவரை யாரும் வரவில்லை. சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர், நில வேம்பு கசாயம் உள்பட மருந்துகள் கொடுக்கப்படுகிறது. காய்ச்சலுக்கான மருந்துகள் போதுமான அளவில் இருப்பு உள்ளன. வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். வைட்டமின் 'சி' சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அவ்வப்போது கபசுர குடிநீர், நில வேம்பு கசாயம் குடித்தால் உடலுக்கு நல்லது.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது

விராலிமலை தாலுகா, மலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை பாண்டிச்செல்வி:- தமிழ்நாட்டில் இன்புளூயன்சா வைரசால் 396 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதன் அறிகுறி எல்லா காய்ச்சலில் உள்ளது போல சளி, இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவையாகும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90 சதவீதம் குறைவாக இருந்தால் இன்புளூயன்சா சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது இருமல் மற்றும் சளி மூலமாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவுகிறது. உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அலட்சியமாக இருந்து விடாமல் அருகே இருக்கும் மருத்துவமனை சென்று உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். காய்ச்சல் அறிகுறி உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். முக கவசம் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சுத்தமான உணவை எடுத்துக்கொள்வது, அதிகளவில் தண்ணீர் குடிப்பது, வெந்நீர் குடிப்பது என அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு வைட்டமின் மற்றும் பாரசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் அறிவுரையின்படி எடுக்க வேண்டும். அவர்களை தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். தீவிர பாதிப்பு உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டும்.

முககவசம் அணிய வேண்டும்

அரிமளம் ஒன்றியம் ஓணாங்குடி கிராமத்தை சேர்ந்த இல்லத்தரசி அபிநயா:- எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், தொண்டை வலி, உடல் வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வேன். டாக்டர்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்குவார்கள். அதிலும் காய்ச்சல் கட்டுப்படவில்லையெனில் ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை செய்வார்கள். குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டில் உள்ள அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். மேலும், சுற்றுச்சூழல், காற்றோட்டம் உள்ளபடி குழந்தைகளை வைத்து பராமரிக்க வேண்டும். ஒரு நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் கூட குடும்பத்தில் உள்ள அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். வெளியில் சென்று வந்தால் கை, கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை குழந்தைகள் சாப்பிட அனுமதிக்க கூடாது. சூடான அல்லது வெதுவெதுப்பான ஆகாரங்கள் மட்டுமே சாப்பிட கொடுக்க வேண்டும். சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ள நாட்களில் கொடுக்க வேண்டும். மேலும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் பழங்களை குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். இதன் மூலம் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட எந்த காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக குழந்தைகள் விடுபடுவார்கள்.

கொசுத்தொல்லை

அறந்தாங்கியை ேசர்ந்த கலைச்செல்வி:- மழைக்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கும்போது காய்ச்சல்கள் வரும். ஆனால், இப்போது வரும் காய்ச்சல் அதுபோல் இல்லை. குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்ததே இதுபோன்ற காய்ச்சல் பரவும் விகிதம் அதிகரிக்க காரணமாகும். குழந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளை அவர்களுக்கு பிடித்த ஏதேனும் ஒருவகையில் உணவில் சேர்த்துக் வழங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதன் மூலம் வைரஸ் காய்ச்சல்களில் இருந்து எளிதாக தப்பித்து கொள்ளலாம். மேலும் கொசுத்தொல்லையை ஒழிக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

சோர்வடையும் குழந்தைகள்

திருமயத்தை சேர்ந்த ரஞ்சிதா:- ஆங்காங்கே குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் காணப்படுகிறது. இந்த வகை காய்ச்சல் வந்த குழந்தைகள் உணவு சாப்பிடாமல் மிகவும் சோர்வுடன் காணப்படுகிறார்கள். கொசுத்தொல்லை அதிகம் இருப்பதால் இந்த காய்ச்சல் வந்திருக்கலாம் என்று தெரிகிறது. குழந்தைகளுக்கு கடையில் விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனி வாங்கி தருவதை பெற்றோர் முதலில் நிறுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை வீட்டில் சமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்