சோமனூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்

சோமனூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-06-20 20:00 GMT

சோமனூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் கோவை தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது.

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி ஆர்.டி.ஓ. பண்டாரிநாதனிடம் கொடுத்தனர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பேசினார்கள். அதன் விவரம் வருமாறு:-

உழவர் சந்தை

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி:- கருமத்தம்பட்டி, சோமனூர், செம்மாண்டம்பாளையம், கிட்டாம் பாளையம், பதுவம்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராள மான காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விசைத்தறி உள்ளிட்ட பல்வேறு தொழிற்கூடங்கள் உள்ளன. எனவே சோமனூரில் உழவர் சந்தை அமைத்தால் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அதை நிறைவேற்ற வேண்டும்.

தொண்டாமுத்தூர் ஆறுச்சாமி:- தென்மேற்கு பருவமழை தற்போது தொடங்கி இருப்பதால் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேர தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வனவிலங்குகள் தொல்லை

சாதி, மத கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி :- கோவை மாவட்ட மலையடிவார பகுதியில் வன விலங்குகள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக காட்டு யானைகள், மயில்களால் பயிர்கள் நாசமாகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே விவசாயிகளை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்