நாகை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
கடனை செலுத்தியும் வீட்டு பத்திரத்தை திருப்பி தராததால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
கடனை செலுத்தியும் வீட்டு பத்திரத்தை திருப்பி தராததால் நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
தீக்குளிக்க முயற்சி
நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் ஒருவர் தான் கொண்டு வந்த கேனில் இருந்த டீசலை தனது தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முன்றனார். இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து அந்த நபரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கினர்.
இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:- எனது பெயர் ராஜ்குமார், நான் திருவாரூர் மாவட்டம் தென்ஓடாச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறேன்.
ரூ.1 லட்சம் கடன்
விவசாயியான நான், கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் விவசாயம் செய்வதற்காக ஒருவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.1 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கினேன். இந்த கடனை 2020-ம் ஆண்டு திருப்பி செலுத்தி விட்டேன்.
வாங்கிய பணத்தை செலுத்திய பிறகும், எனது அசல் பத்திரத்தை கொடுக்காமல் அலைக்கழித்து வருகிறார். இதுதொடர்பாக பல நாட்கள் அவர் பணியாற்றும் அலுவலகத்துக்கு சென்று கேட்டும், அசல் பத்திரத்தை தரவில்லை.
பரபரப்பு
விவசாயத்தில் நஷ்டம் அடைந்ததாலும், கடனை திரும்பி கொடுத்தும் வீட்டு பத்திரத்தை திரும்பி தராததாலும் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். மேலும் எனது வீட்டின் அசல் பத்திரத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் சமாதானம் செய்து ராஜ்குமாரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.