பொருட்கள் வாங்க வந்த இடத்தில் ரூ.50 ஆயிரத்தை தவறவிட்ட விவசாயி

திட்டக்குடியில் மகளின் திருமணத்துக்காக பொருட்கள் வாங்க வந்த இடத்தில் தவற விட்ட ரூ.50 ஆயிரத்தை வணிகர் சங்கத்தினர் மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தனர்.

Update: 2023-08-19 18:45 GMT

திட்டக்குடி

விவசாயி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஓலைப்பாடி, கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி(வயது 65). விவசாயியான தனது மகளின் திருமணத்துக்காக பொருட்கள் வாங்குவதற்காக நேற்று பஸ் ஏறி திட்டக்குடிக்கு வந்தார்.

பின்னர் அங்கு கடைவீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் பஸ் ஏறி பெரம்பலூருக்கு சென்றார். அப்போது தனது பணப்பையை பார்த்தபோது காணமால் சிவசாமி அதிா்ச்சி அடைந்தார். அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது.

மீண்டும் திட்டக்குடிக்கு வந்தார்

தான் பொருட்கள் வாங்கிய மளிகை கடையில் பணப்பையை தவற விட்டு இருக்கலாம் என்று கருதிய சிவசாமி தனது உறவினர்களுடன் அங்கிருந்து மீண்டும் பஸ் ஏறி திட்டக்குடிக்கு வந்தார்.

அங்கு பொருட்கள் வாங்கி மளிகை கடையில் பணப்பையை தேடிய போது கடையின் உரிமையாளர், பணப்பை வணிகர் சங்க மவட்ட துணை தலைவர் குருநாதனிடம் உள்ளது. அங்கு போய் உரிய ஆணங்களை காண்பித்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

கண்ணீர் மல்க நன்றி

இதைக்கேட்டதும் மன நிம்மதி அடைந்த சிவசாமி வணிகர் சங்க நிர்வாகி குருநாதனை சந்தித்து பணப்பையை தவற விட்டு சென்றதை கூறினார். பின்னா் தனது பணத்துக்கு உரிய ஆவணங்களையும் அவரிடம் காண்பித்தார்.

உடனே அவரும் ரூ.50 ஆயிரத்துடன்கூடிய பணப்பையை சிவசாமியிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர் திட்டக்குடி வணிகர் சங்கத்துக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு பணப்பையுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். மகளின் திருணமத்துக்காக பொருட்கள் வாங்க வந்த இடத்தில் விவசாயி தவற விட்ட ரூ.50 ஆயிரத்தை வணிகர்சங்கத்தினர் மீட்டு ஒப்படைத்த சம்பவம் திட்டக்குடியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்