சாமி தரிசனத்துக்கு வந்த விவசாயி திடீர் சாவு
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்கு வந்த விவசாயி திடீரென்று இறந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 29). விவசாயி. இவர், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த செந்திலுடன் (32) சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக இருவரும் மலைக்கோவிலுக்கு சென்றனர்.
இந்நிலையில் மலைக்கோவில் பகுதியில் வைத்து திடீரென கவுதமுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ரோப்கார் மூலம் கவுதமை கீழே இறக்கி, ஆம்புலன்சில் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கவுதம் பரிதாபமாக இறந்தார்.
கவுதம் சாவுக்கான காரணம் குறித்து, பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.