கலெக்டரின் காரை வழிமறித்து தீக்குளிக்க முயன்ற விவசாயி

மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறையில், கலெக்டரின் காரை வழிமறித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-03 18:45 GMT


மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறையில், கலெக்டரின் காரை வழிமறித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராக்டர்கள் ஜப்தி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா முத்தூர் அகரஆதனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்மோகன்(வயது 35). விவசாயி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் விவசாய கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கி உள்ளார்.

இந்த டிராக்டர்களை தனியார் நிதி நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழலில் ஜப்தி செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதன்மோகன் கொரோனா காலத்தில் தனது டிராக்டர்களை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனம் மீதும், அவரது கையெழுத்தை போலியாக போட்டு பெயரை மாற்றி மோசடி செய்த டிராக்டர் விற்பனை முகவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் புகார் அளித்தார்.

கலெக்டர் உத்தரவு

ஆனால் உரிய நடவடிக்ைக எடுக்கப்படாததால் மதன்மோகன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மதன்மோகன் புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் டிராக்டர் விற்பனை நிறுவன உரிமையாளர், மேலாளர் ஆகிய 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டிய மதன்மோகன் கடந்த மாதம்(ஜூன்) 5-ந்தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாயார் உமாமகேஸ்வரியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

காரை வழிமறித்து தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி காரில் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மயூரநாதர் கீழ வீதியில் திடீரென கலெக்டரின் காரை வழிமறித்த மதன்மோகன் தனது உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

இதனை கண்ட போலீசார் ஓடிச்சென்று மதன்மோகனை பிடித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். அப்போது கலெக்டரிடம், மதன்மோகன், தனது 2 டிராக்டர்களை ஜப்தி செய்ததோடு, அதனை முறைகேடாக வேறு ஒருவருக்கு வாகனப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மீண்டும் விசாரணை

இதனை கேட்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து மீண்டும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் சம்பவ இடத்தில் இருந்தபடி வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜனை நேரில் வரவழைத்த கலெக்டர், மதன்மோகன் விவகாரத்தில் நடந்த தவறுகள் குறித்து தெளிவாக பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.

கலெக்டரின் காரை வழிமறித்து விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்