அரசு அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி

பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் கேட்டதால் மணலூர்பேட்டையில் அரசு அலுவலக வளாகத்தில் விவசாயி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-02-06 20:06 GMT

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அருதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் மோகன்குமார்(வயது 30). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 19 சென்ட் இடத்தை தனது மனைவி பெயரில் தான செட்டில்மெண்ட் எழுதுவதாகவும், அதில் 2 சென்ட் இடத்தை பிரித்து மனைப்பிரிவில் பத்திர பதிவு செய்ய வேண்டும் என மணலூர்பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் கூறியதாக தெரிகிறது. இதற்கு உரிய பதிவு கட்டணத்தை சார் பதிவாளர் கூறினார். ஆனால் தன்னிடம் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி சார்பதிவாளரிடம் மோகன்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விரக்தி அடைந்த அவர் மண்எண்ணெய் கேனுடன் வந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மணலூர் பேட்டை போலீசார் மோகன்குமாரின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மணலூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்