திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டி படுகொலை

புதுக்கோட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு திரும்பி வந்த போது திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-12-12 18:30 GMT

பல்வேறு கொலை வழக்குகள்

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). பிரபல ரவுடியான இவர், மீது திருச்சி-புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் முக்கியமானது புதுச்சேரியில் கடந்த 2017-ம் ஆண்டு துணை சபாநாயகராக இருந்த சிவக்குமாரை வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளவரசன் முக்கிய குற்றவாளியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஒரு வழக்கில் அவர் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். எனவே நிபந்தனை ஜாமீனில் உள்ள அவர் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக நேற்று காலை புதுக்கோட்டை கோர்ட்டிற்கு வந்தார். பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தனது நண்பர்கள் 3 பேருடன் கோர்ட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள புதுக்குளம் கரை அருகே அய்யனார் புரம் சாலையில் மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவர்களை பின் தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் புதுக்குளத்தின் தென்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளவரசனை வழிமறித்தனர். அப்போது இளவரசனின் நண்பர்கள் 3 பேர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து நடுரோட்டில் வாகனத்தில் இருந்து இளவரசனை கீழே தள்ளி அவரை சரமாரியாக அரிவாள் மற்றும் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். மர்மகும்பல் வெட்டியதில் முகம் சிதைந்து இளவரசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் மர்மகும்பல் மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

4 தனிப்படை அமைப்பு

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இளவரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நாய் மோப்பம் பிடித்த படி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு

பட்டப்பகலில் அதுவும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தப்பிேயாடிய இளவரசனின் நண்பர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களை பின் தொடர்ந்து வந்த நபர்கள் யார்? என்பது குறித்த தகவல் இளவரசனின் நண்பர்களான இவர்கள் 3 பேருக்கும் தெரிந்திருக்கும் என்ற ரீதியில் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்