பொய் வழக்கு பதிந்து கணவரை கைது செய்துவிட்டனர்கண்டமங்கலம் போலீஸ் மீது கைக்குழந்தையுடன் பெண் புகார்

பொய் வழக்கு பதிந்து கணவரை கைது செய்துவிட்டனர் என்று கண்டமங்கலம் போலீஸ் மீது கைக்குழந்தையுடன் பெண் புகார் செய்துள்ளாா்.

Update: 2023-08-21 18:45 GMT


விழுப்புரம் அருகே பள்ளித்தென்னல் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீநாத் மனைவி ராஜேஸ்வரி (வயது 19). இவர் தனது கைக்குழந்தை ஸ்ரீதர்ஷன் மற்றும் மாமியார் தேவியுடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் ஸ்ரீநாத் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 16-ந் தேதி மதுபோதையில் வீடு திரும்பிய ஸ்ரீநாத், அவரது அண்ணன் சீனிவாசன் (22) ஆகிய இருவரையும் புதுச்சேரி சோம்பட்டை சேர்ந்த சக்திவேல் (32) என்பவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது, சக்திவேல் இரும்பு பொருட்களை எடுத்து சென்று இருக்கிறார்.

சிறிது தூரம் சென்றதும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று இரும்புப்பொருட்களை திருடி வந்ததாக கூறி சக்திவேலை பிடித்து கண்டமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஸ்ரீநாத், சீனிவாசன் ஆகியோரை கண்டமங்கலம் போலீசார், விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். சக்திவேல் அழைத்ததன்பேரில் ஸ்ரீநாத்தும், சீனிவாசனும் அவருடன் சென்றனர். மற்ற எதுவும் இருவருக்கும் தெரியாது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 13-ந் தேதி நவமால்காப்பேர் கிராமத்தில் வீடு புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற வழக்கில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீநாத், சீனிவாசன் ஆகிய இருவரின் மீதும் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். எனது கணவரை பொய் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளதால் என்னுடைய எதிர்காலமும், எனது குழந்தையின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்