திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.
திண்டுக்கல் அருகே வெள்ளோடு பகுதியில் நேற்று 2 ரெயில் தண்டவாளங்களுக்கு நடுவே ஒரு மூதாட்டியின் உடல் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அங்கு பிணமாக கிடந்தவர் வெள்ளோட்டை அடுத்த மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த சவரியம்மாள் (வயது 72) என்பதும், அந்த வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.