ஆட்டுக்குட்டிகளுக்கு பால் ஊட்டும் நாய்

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் ஊட்டும் நாயை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

Update: 2022-12-07 19:04 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தில் வசித்து வருபவர் சேகர். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டில் 10 ஆடுகளையும், 3 நாய்களையும் வளர்த்து வருகிறார். அதில் சமீபத்தில் ஒரு ஆடு 2 குட்டிகளை ஈன்ற நிலையில் அவர் வளர்த்து வந்த நாயும் சில குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் குட்டிகளை இழந்த நாய் தவித்து வந்துள்ளது. அப்போது சேகர் வளர்த்து வரும் குட்டிகளை ஈன்ற ஆட்டிற்கு தீவனங்கள் அளிக்க போதுமான வருமானம் இல்லை. ஆகவே ஆட்டுக்கு பால் சுரப்பு குறைவாகவே இருந்துள்ளது. ஒரே வீட்டில் வளர்ந்து வரும் ஆடும், நாயும் சமகாலத்தில் குட்டிகளை ஈன்ற போதும் தனது குட்டிகளை பறிகொடுத்த நாய் பால் இல்லாமல் பரிதவித்த ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்க தொடங்கியது. ஆட்டுக்குட்டிகளும் நாயிடமிருந்து உற்சாகமாக பால் குடிக்க துவங்கின. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

பொதுவாக எலிக்கு, பூனையும், பூனைக்கு நாயும், நாய்க்கு ஆடும், குரங்குக்கு கிளியும் என ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொள்ளும் ஜீவராசிகளாகவே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஆடுகளை கண்டால் துரத்தும் நாய், ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டுவது அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தா.பழூர் கால்நடை மருத்துவர் வெற்றிவடிவேல் கூறுகையில், ஹார்மோன் தூண்டுதலால் உந்தப்பட்டிருக்கும் குட்டிகளை இழந்த ஜீவராசி அவற்றை பால் குடிக்க அனுமதிக்கும். இதன் மூலம் ஆட்டுக்குடிகளுக்கு பால் கிடைப்பதுடன், குட்டிகளுக்கு பால் கொடுக்க முடியாத ஜீவ ராசிக்கு ஏற்படும் வலி உள்ளிட்ட பிற உபாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்