மேற்படிப்பு படித்த டாக்டர் திடீர் சாவு

மேற்படிப்பு படித்த டாக்டர் திடீரென இறந்தார்.

Update: 2022-12-02 21:24 GMT

மருத்துவ மேற்படிப்பு

கடலூர் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் இளங்கோவன்-ஜீவா தம்பதி. இவர்கள் சென்னை ஆவடி பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் பிரேம்நாத் (வயது 30). எம்.பி.பி.எஸ். முடித்து அரியலூர் மாவட்டம் குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

பின்னர் மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வான இவர், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்.டி. (அறுவை சிகிச்சை) இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கு வருகிற மே மாதத்துடன் படிப்பு முடிய உள்ளதால், இவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்தனர்.

மயங்கி விழுந்து சாவு

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த பிரேம்நாத், மதியம் 2.30 மணிக்கு தன்னுடன் படிப்பவர்களுடன் மதிய உணவு சாப்பிட மன்னார்புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு முடித்தவுடன், கைகழுவ சென்ற பிரேம்நாத் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனே டாக்டர்களான அவருடைய நண்பர்கள் பிரேம்நாத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தாங்கள் சென்ற காரிலேயே தூக்கிக்கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி பிரேம்நாத்தின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.

கதறி அழுத பெற்றோர்

பிரேம்நாத்தின் மருத்துவ மேற்படிப்பு முடிய இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அவர், திடீரென இறந்தது அவருடைய பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களும் திருச்சிக்கு விரைந்து வந்து தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். உடன் படித்த மாணவ-மாணவிகளும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், சக மாணவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் நேற்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்