பயிற்சி பெற வந்த டாக்டர் திடீர் சாவு

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த திருச்சியை சேர்ந்த டாக்டர், விடுதி அறையிலேயே ் இறந்து கிடந்தார்.

Update: 2023-07-01 12:02 GMT

தனியார் மருத்துவமனையில் பயிற்சி

திருச்சி மாநகர் உறையூர் சாஸ்திரிதெரு லாவண்யா அசோக் அபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் திலீப் (வயது 31), டாக்டர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் கிளினிக் நடத்தி வந்தார். இவருடைய மனைவி பிரியா (28). இவர்களுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

டாக்டர் திலீப் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு வாரகால பயிற்சிக்காக கடந்த வாரம் வந்தார்

கடந்த 28-ந் தேதி மருத்துவமனையில் பயிற்சி முடித்து விட்டு சத்துவாச்சாரியில் உள்ள அறைக்கு சென்றார். மறுநாள் காலை அவர் பயிற்சிபெற மருத்துவமனைக்கு செல்லவில்லை. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அதனை எடுத்து பேசவில்லை.

மாலையில் அவருடன் பயிற்சி பெற்ற டாக்டர்கள் திலீப்பை பார்க்க சென்றபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் விடுதி ஊழியர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

டாக்டர் சாவு

அங்கு டாக்டர் திலீப் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி கீழே கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் திலீப்பை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சத்துவாச்சாரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.பிச்சாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். டாக்டர் திலீப் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து திலீப்பின் மனைவி பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி பெற வந்த இடத்தில் டாக்டர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்