500 அடி தூரம் கடல் உள்வாங்கியது
வேதாரண்யத்தில் 2- வது நாளாக 500 அடி தூரம் கடல் உள்வாங்கியது. 7- வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 2- வது நாளாக 500 அடி தூரம் கடல் உள்வாங்கியது. 7- வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மோக்கா புயல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள மோக்கா புயல் காரணமாக கடலில் பலத்த காற்ற வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர். ஒரு சில மீனவர்கள் மீன்பிடிக்க தேவைப்படும் வலை உள்ளிட்ட பொருட்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
500 அடி தூரம் உள்வாங்கியது
நேற்று முன்தினம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து வேதாரண்யம் சன்னதி கடல் வரை சுமார் 100 அடி தூரம் கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக வேதாரண்யம் கடற்கரையில், கடல் நீர் சுமார் 500 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்ள சேர் வெளியே தெரிகிறது. கடல்நீர் வெகு தூரம் உள்வாங்கி இருப்பதால் மீனவர்களும் பொதுமக்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
வழக்கமாக கடல் உள்வாங்குவதும் பின்பு வெளி வருவதும் தொடர்ந்து நடைபெற்றாலும், தற்போது அதிக தூரம் கடல் நீர் உள்வாங்கி இருப்பது கடலில் ஏற்பட்டுள்ள மோக்கா புயல் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.