கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு வாலிபருக்கு அடி-உதை

Update: 2023-08-09 07:02 GMT

பேரம்பாக்கம்,

பேரம்பாக்கம் அடுத்த மப்பேடு புதிய காலனியை சேர்ந்தவர் மோதிலால் (வயது 24). கடந்த 6-ந் தேதி மப்பேடு ஓசூரம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மோதிலால், அவரது உறவினர்களை அழைத்துச் சென்றார். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு, மதன், விஷால், மணிகண்டன் ஆகிய 4 பேரும் மோதிலாலின் உறவினர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதை மோதிலால் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் வீட்டுக்கு வந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மோதிலாலுக்கு போன் செய்த அவர்கள் இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அழைத்தனர்.

இதை தொடர்ந்து மோதிலால் மப்பேடு அருகே பேச்சு வார்த்தைக்கு சென்றார். அப்போது மேற்கண்ட 4 பேரும் மோதிலாலை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த மோதிலால் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மோதிலால் மப்பேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக டில்லிபாபு, மதன், விஷால், மணிகண்டன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்