முன்விரோதத்தில் நடந்த தகராறில் மாற்றுத்திறனாளிக்கு சரமாரி வெட்டு

தூசி அருகே மாற்றுத்திறனாளி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தப்பி ஓடிய தந்தை-மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-22 17:09 GMT

தூசி

தூசி அருகே மாற்றுத்திறனாளி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தப்பி ஓடிய தந்தை-மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.

குட்கா விற்பனை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் (வயது 42). மாற்றுத்திறனாளியான இவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக டெய்லராக உள்ளார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர் ஏழுமலையும் இவரது மகன்கள் அஜித், நாகமணியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்றதாக போலீசாருக்கு புகார்கள் சென்றன.

குட்கா விற்றதை வரதன் காட்டிக்கொடுத்ததாக கூறி இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர் இதனால் வரதன், நல்லூரில் இருந்து வெளியேறி மாமண்டூர் ரோடு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை 8:30 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள சுடுகாடு பாதை வழியாக வரதன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

வெட்டு

அப்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 பேர் வரதனை கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து அவசரம் அவசரமாக செல்ல முயன்றார். ஆனால் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரை சரமாரி வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் வரதன் மயங்கி கீழே விழுந்தார். உடனே 3 பேரும் தங்கள் மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்த தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் இருந்த வரதனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து வரதன் மனைவி வசந்தா அளித்த புகாரில் முன்விரோத தகராறு காரணமாக ஏழுமலை, அவரது மகன்கள் அஜித், நாகமணி ஆகியோர் வெட்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலை மற்றும் அவரது 2 மகன்களை தேடி வருகின்றனர்

பட்டப் பகலில் மாற்றுத்திறனாளியை வெட்ட கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்