காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி சாவு

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்தினாளி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-26 19:30 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி மாற்றுத்தினாளி பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டு யானைகள் அட்டகாசம்

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, காட்டெருமைகள், காட்டுப்பன்றிகள் சிறுத்தை, புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர்தேடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் வனவிலங்கு-மனித மோதல்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாற்றுத்திறனாளி பலி

இந்த நிலையில் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 46), மாற்றுத்திறனாளி. இவர் திருமணமாகி ராதிகா (39) என்ற மனைவியும், சந்தியா (20) என்ற மகளும், சஞ்சய் (16) என்ற மகனும் உள்ளனர்.

குமார் நேற்று மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சேரம்பாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென அவரை தாக்கிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து அறிந்து வந்த வனச்சரகர் (பொறுப்பு) ரவி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஜிதா என்ற பெண் யானை தாக்கி இறந்தது குறிப்பிடத்தக்கது.

சாலை மறியல்

இந்த நிலையில் பொதுமக்கள் சேரம்பாடி அருகே சுங்கம்பகுதியில் வனத்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட வனஅலுவலர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

மறியல் காரணமாக பந்தலூர்-கோழிக்கோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வானங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முகமதுகுதரத்துல்லா, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செந்தில்குமார், செல்வராஜ், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், தினேஷ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்