பாழடைந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் தேவை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி அருகே பாழடைந்த நூலககட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-10 18:45 GMT


பண்ருட்டி, 

நூலகங்கள்! மனிதனின் அறிவு கிடங்கு, அறிவின் புதையலாக விளங்குகிறது. அதோடு கடந்த காலத்தையும், நிகல் காலத்தையும் புத்தகங்கள் வாயிலாக இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு பாலமாக நூலகங்கள் விளங்குகின்றன. அத்தகைய நூலக கட்டிடங்கள் இன்றும் பல கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் மருங்கூரில் கிளை நூலக கட்டிடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது.

கட்டிட சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையில், கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இடவசதி இல்லை

கடந்த 35 ஆண்டுகளாக கிராமத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அறிவுதிருக்கோவிலாக விளங்கிய இந்த நூலக கட்டிடம் இன்று பராமரிப்பு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், நூலக கட்டிடமானது அங்குள்ள தனியார் கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இயங்கி வருகிறது. வாடகை கட்டிடமான இங்கு, போதிய இட வசதி இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் இங்கு வந்து படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

கிராமத்து மக்கள் தரப்பில் புதிய நூலகம் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இது நாள் வரையில் அதற்கான எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

கிராம மக்கள் கோரிக்கை

புத்தகங்களால் தான் உலகில் உயர்ந்தவர்கள் பலர் என்பார்கள். அந்த வகையில் புத்தகங்களால் கடந்த 35 ஆண்டுகளாக கிராமத்து இளைஞர்களின் வாழ்வை உயர்த்தி பிடித்த நூலக கட்டிடத்துக்கு இன்று சோதனை காலமாக உள்ளது.

கட்டிடத்தை சோதனை காலத்தில் இருந்து மீட்டு, புத்தம் புதிய கட்டிடத்துடன் மீண்டும் புத்துணர்வுடன் இயங்க செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கிராமத்து மக்களின் கோரிக்கையாக உள்ளது. இவர்களது கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்