கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பக்தர்

துரிஞ்சிகுப்பம் கோவிலில் ஆடிப்பூர விழாவில் கொதிக்கும் எண்ணெயில் பக்தர் ஒருவர் கையால் வடை எடுத்தார்.

Update: 2023-07-22 17:45 GMT

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே துரிஞ்சிகுப்பம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 23-ம் ஆண்டு ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அம்மனுக்கு ஊரணி பொங்கல் வழிபாடு நடந்தது.

நேற்று காலை 5 மணி அளவில் சக்தி ஹோமத்துடன், அம்மனுக்கு மஞ்சள் குடம் சமர்ப்பணமும், காலை 9 மணி அளவில் பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி அம்மன் தேர் இழுத்தல், 108 பால்குட ஊர்வலம், பகல் 1 மணி அளவில் அன்னதானம் ஆகியவை நடந்தது.

2 மணிக்கு மேல் பக்தர்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல், கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் கையால் எடுத்த 7 வடைகள் பக்தர்களுக்கு ஏலம் விடப்பட்டது.

இதில் திருமணமாகி குழந்தையில்லாத தம்பதியர் முதல் வடை ரூ.4700-க்கும், 2-வது வடை ரூ.3800-க்கும், 3-வது மற்றும் 4-வது வடைகள் தலா ரூ.3700-க்கும் உள்பட மொத்தம் 7 வடைகள் ரூ.21 ஆயிரத்து 900-க்கு ஏலம் விடப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு ஏலம் எடுத்த வடை உண்டு குழந்தை பெற்ற தம்பதியர் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம் வழங்கினர்.

மாலையில் அம்மன் திருவீதி உலாவும், இரவில் நாடகம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை துரிஞ்சிகுப்பம், பெரியேரி, கம்மனந்தல் உள்பட பல்வேறு கிராம மக்கள், ஓம்சக்தி பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்