மயானத்தில் குழி தோண்டி விரதம் இருக்கும் பக்தர்
இட்டமொழி அருகே குலசை பக்தர் ஒருவர் மயானத்தில் குழி தோண்டி விரதம் இருந்து வருகிறார்.
இட்டமொழி:
இட்டமொழி அருகே சங்கனாங்குளம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 46). பாளையங்கோட்டை உழவர் சந்தை அருகில் பெட்டிக்கடை நடத்தும் இவர், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்காக துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளார். அதன்படி அவர், சங்கனாங்குளம் மயானத்தில் 6 அடி ஆழ குழி தோண்டி, அதில் 21 நாட்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து சந்திரன் கூறுகையில், ''எனது தொண்டையில் இருந்த புற்றுநோய் குணமாக குலசேகரன்பட்டினம் கோவிலில் வேண்டினேன். தொடர்ந்து எனது நோய் குணமானது. எனவே உணவு அருந்தாமல் தண்ணீர் மட்டும் குடித்து, மயானத்தில் உள்ள குழியில் 21 நாட்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்கிறேன். மேலும் எனது தங்கைக்கு குழந்தை வரம் கிடைக்கவும் அம்மனிடம் வேண்டுகிறேன்'' என்றார்.