தமிழகம் நோக்கி வரும் தாழ்வு பகுதி.. சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11, 12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-11-10 03:27 GMT

சென்னை,

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இதனால், தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்றும், 10,13 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும்,11,12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் 12ம் தேதி வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்11, 12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.          

 

Tags:    

மேலும் செய்திகள்