அருமனை அருகேரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்த யானை
அருமனை அருகே களியல் வனச்சரக வனபகுதியில் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
அருமனை,:
அருமனை அருகே களியல் வனச்சரக வனபகுதியில் ரப்பர் தோட்டத்தில் இறந்து கிடந்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யானைகள் நடமாட்டம்
அருமனை அருகே உள்ள களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பத்துகாணி, கற்றுவா, ஒருநூறாம்வயல் போன்ற இடங்களை சுற்றி வனப்பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து தென்னை, வாழை மற்றும் விவசாய பயிர்களை அழித்தன. அப்போது வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் காட்டு யானைகள் கற்றுவா வனப்பகுதிக்கு அருகில் உள்ள தனியார் தோட்டங்களில் புகுந்தன.
இறந்து கிடந்த யானை
நேற்று அதிகாலையில் பால்வடிப்பு தொழிலாளி ஒருவர் ரப்பர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தோட்டத்தில் ஒரு யானை படுத்திருப்பது போல் தெரிந்தது. இதைபார்த்து சந்தேகம் அடைந்த தொழிலாளி சற்று தொலைவில் நின்று யானையை உற்று நோக்கினார். அப்போது அந்த யானை எந்த விதமான அசைவும் இல்லாமல் கிடந்தது. இதனால் அது இறந்து கிடப்பது தெரிய வந்தது.
மேலும், அதன் பக்கத்தில் மேலும் பல யானைகள் கூட்டமாக நின்று ெகாண்டிருந்தன. உடனே அந்த தொழிலாளி அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து அவர் களியல் வனச்சரக வன காவலர்களுக்கு தகவல் கொடுத்தார். வன காவலர்கள் மற்றும் வனவர் அங்கு சென்றனர்.
அப்போது தனியார் தோட்டத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டனர். அதன் அருகே வேறு சில யானைகளும் நின்று கொண்டிருந்தன. உடனே வனத்துறையினர் மற்ற யானைகளை வனத்திற்குள் விரட்டினர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மோதலில் இறந்ததா?
மேலும் நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவ பிரிவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவ பிரிவினர் மாலை 4 மணியளவில் வனப்பகுதிக்கு வந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி வன பாதுகாப்பு அலுவலர் சிவகுமார், களியல் வனச்சரக அலுவலர் முகைதீன், வனவர் கணேஷ் மகாராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்த யானையை அதே இடத்திலேயே அடக்கம் செய்ய பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.
வனப்பகுதியில் யானைகள் சண்டை போட்டதால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.