ஆவினில் ஒரு நாள் பால் கொள்முதல் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்-அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

ஆவினில் ஒரு நாள் பால் கொள்முதல் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

Update: 2023-06-13 21:42 GMT


ஆவினில் ஒரு நாள் பால் கொள்முதல் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

70 லட்சம் லிட்டர்

மதுரை ஆவின் பால் உற்பத்தி மையம் மற்றும் ஐஸ்கிரீம் தொழிற்சாலை ஆகியவற்றை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்க கூடிய சிறந்த பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், பால் பொருட்கள் தரமாகவும் குறைந்த விலையிலும் பொதுமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் தற்போது ஆவின் மூலம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் முதல் 45 லட்சம் லிட்டர் வரையில் பால் கையாளப்படுகிறது. இதனை 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும். அதற்கு இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் உற்பத்தி மையங்களின் செயல்பாடு, உட்கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தேசிய அளவிலும், மாநில அளவிலும் பால் உற்பத்தியைப் பெருக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்திடும் வகையில் கறவை மாடுகள் வாங்க கடனுதவி வழங்குதல், கறவை மாடுகளுக்கு காப்பீடு, பசுந்தீவனப் புல் வளர்ப்புக்கான விதை வழங்குதல், அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பரிசு வழங்கி ஊக்குவித்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு சட்டம்

ஆவின் நிறுவனம் பால் உற்பத்தி மட்டுமல்லாது தயிர், மோர், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் பால் பொருட்களின் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இந்தியாவில் மாநிலங்களுக்குள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒருவருக்கு ஒருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல் பால் கொள்முதலை அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கை மரபு மீறிய செயல் என அதில் சுட்டி காட்டி உள்ளார். அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தான் அந்தந்த பகுதிகளில் பால் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதனை மத்திய அரசு தான் சட்டமாக கொண்டு வரமுடியும்.

நலத்திட்ட உதவி

பால் கொள்முதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை உயர்த்திட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது தொடர்பாக, முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சரிடம், தமிழகத்தின் மொத்த பால் உற்பத்தி எவ்வளவு, அதில் ஆவின் கொள்முதல் அளவு எவ்வளவு சதவீதம் என்று கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர், தமிழகத்தில் தனியார்கள் பால் கொள்முதல் செய்யும் அளவு அதிகமாக உள்ளது என்று பதிலளித்தார். அதனைத்தொடர்ந்து ஆவின் அலுவலக வளாகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 154 பயனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 37 ஆயிரத்து 780 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் ஆவின் நிர்வாக இயக்குநர் வினீத், கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், ஆவின் பொது மேலாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்