ஒரு நாள் தலைமை ஆசிரியராக்கி மாணவர் கவுரவிப்பு

அரசு பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பள்ளி நிர்வாகிகள் பொறுப்பேற்க வைத்து கவுரவித்தனர். அந்த மாணவர் இது மேலும் தேர்வில் வெற்றி பெற ஊக்கம் அளிப்பதாக கூறினார்.

Update: 2023-10-06 19:45 GMT

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் 171 பேரும், மாணவிகள் 88 பேரும் சேர்த்து 259 பேர் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 14 ஆசிரியர்கள் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இந்த ஆண்டு மாநில அளவில் மாணவ-மாணவிகளை தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளிடம் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றால் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என்றார். இந்த நிலையில் மாணவன் தர்ஷன் முதலிடமும், கவின்ராஜ் 2-வது இடமும் பிடித்தனர். இதை தொடர்ந்து நேற்று தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் தர்ஷன் ஒரு நாள் தலைமை ஆசிரியராகவும், 2-ம் இடம் பிடித்த சுவின்ராஜ் உதவி தலைமை ஆசிரியராகவும் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதையொட்டி வகுப்பறையில் இருந்து மாணவன் தர்ஷனை, தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் அழைத்து வந்து தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்கள் தர்ஷன், சுவின்ராஜ் ஆகியோருக்கு ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சக மாணவ-மாணவிகள் கைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இதுகுறித்து மாணவர் தர்ஷன் கூறியதாவது:-காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக என்னை ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க வைத்த, தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு மிகவும் பெருமையாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது. மற்ற பள்ளிகளிலும் இதேபோன்று ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை ஊக்குவித்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். மேலும் தற்போது சைபர் செக்யூரிட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை பாதுகாக்க சைபர் செக்யூரிட்டி அதிகாரியாக வருவது எனது லட்சியமாகும் என்றார்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றோம். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பிடிப்பதற்காக மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக காலாண்டு தேர்வில் எந்த மாணவன் முதல் மதிப்பெண் வாங்குகிறானோ அந்த மாணவனை ஒருநாள் தலைமை ஆசிரியராக பதவியில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன்.

அதன்படி தற்போது ஒரு நாள் தலைமை ஆசிரியராக மாணவர் தர்ஷன் பொறுப்பேற்று உள்ளார். படிப்பு மட்டுமே மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்