இருள்சூழ்ந்து காணப்படும் ரெயில்வே சுரங்க பாதை

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ரெயில்வே சுரங்க பாதை இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

Update: 2022-12-12 13:15 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் ரெயில்வே சுரங்க பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் வழியாக தான் ரெயில் தண்டவாளத்திற்கு மறுபுறம் உள்ள வேளாண்மை அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், மாவட்ட தொழில் மையம், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், போலீஸ் பயிற்சி மையம், போலீசார் குடியிருப்பு உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல முடியும்.

மேலும் இந்த வழியாக சென்றால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எளிதாக சென்று விடலாம்.

அதனால் அந்த ரெயில்வே சுரங்கப்பாதையை தற்போது பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சுரங்க பாதையின் மேல் பகுதியில் தகர ஷீட்டினால் மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

மின்விளக்கு வசதி ஏற்படுத்தபடாததால் இந்த பாதை பகல் நேரங்களிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சுரங்க பாதையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மேலும் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் வாகனத்தின் மின்விளக்கை ஒளிரவிட்டபடி சென்று வருகின்றனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொண்டு ரெயில் சுரங்க பாதைக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்