சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது

பந்தநல்லூர் அருகே சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-26 20:54 GMT

திருப்பனந்தாள்:

பந்தநல்லூர் அருகே சித்து மாரியம்மன் கோவிலில் திரைச்சீலை தீப்பிடித்து எரிந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் திரை சீலை தீப்பிடித்தது

தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே நெய்க்குன்னம் பகுதியில் சித்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 10-ந்தேதி நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் கோவில் பிரகார பகுதியில் இருந்த திரைச்சீலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பக்தர்கள் தீயை அணைத்தனர்.

இந்து அமைப்பினர் திரண்டனர்

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சதீஷ்குமார் தலைமையில் அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவர் ராமநிரஞ்சன், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் உள்பட பல்வேறு இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர்.

பரபரப்பு

அப்போது தீப்பிடித்து எரிந்த திரைசீலை அருகே பெட்ரோல் பாட்டில் திரியுடன் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. எனவே இதுதொடர்பான போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அங்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலையை மறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்