தாமரைக்குளம் கரையில் விரிசல்

திருக்குறுங்குடி அருகே தாமரைக்குளம் கரையில் விரிசல் ஏற்பட்டது.

Update: 2023-07-09 19:00 GMT

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் தாமரைக்குளத்தின் மூலம் 100 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிர் செய்து வருகின்றனர். இந்த குளத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலை சின்ன மாஞ்சோலை நறக்காடு பகுதியில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தது.

அதன் காரணமாக தாமரைக்குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதற்கிடையே குளத்தின் மடை அருகே கரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குளம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். களக்காடு யூனியன் நிர்வாகத்தினர் விவசாயிகள் உதவியுடன் விரிசலை மண் போட்டு தற்காலிகமாக அடைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கரையில் ஏற்பட்டுள்ள விரிசலை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்