சிறுத்தை தாக்கி பசுமாடு பலி

கே.வி.குப்பம் அருகே சிறுத்தை தாக்கியதில் பசுமாடு பலியானது.

Update: 2023-09-18 17:24 GMT

மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு

கே.வி.குப்பம், தாலுகா காங்குப்பத்தை அடுத்த வாணிகிணறு வனப்பகுதியை ஒட்டியபடி சிறு கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இருந்து சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வெளியேறி கிராம பகுதிகளுக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி- சரிதா தம்பதியினர் 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 16-ந் தேதி காலை வழக்கம்போல் மாடுகளை அருகிலுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீடுதிரும்பியதும் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிவர சரிதா சென்றார்.

சிறுத்தை தாக்கி பலி

அப்போது மாடுகள் பயங்கரமாக அலறும் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று அங்கிருந்து தப்பி ஓடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஒரு மாட்டை சிறுத்தை தாக்கியதில் காயம் அடைந்திருந்தது. அந்த பசுமாட்டை மேல்மாயில் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பசுமாடு நேற்று உயிரிழந்தது.

வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று விடுவதாகவும், இதனால் வெளியில் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவோ பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த கால்நடைக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்