பிரியமுடன் வாழ்வதே பிரியாத தம்பதியர் வாழ்க்கை...அந்தவகையில் இந்த தம்பதியரும் இளமையில் இருந்தது போல் முதுமையிலும் இணைபிரியாமல் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் இயற்கையின் விளையாடல் பழனிச்சாமி-கருப்பாத்தாள் ஆகிய இருவரையும் ஒன்றாய்...இறப்பிலும் இணை பிரியாத தம்பதியாய்....இறுதி ஊர்வலத்தை தழுவ வைத்து விட்டது என்பது தான் சோகம்.
தம்பதி
ஆம்....கோவை மாவட்டம் சோமனூர் செந்தில் நகரை சேர்ந்தவர் சி.பழனிச்சாமி (வயது78). இவரது மனைவி கருப்பாத்தாள் (71). இந்த தம்பதியினருக்கு ராஜேந்திரன் (47), செந்தில் முருகன் (44) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
பழனிச்சாமி கோவை,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவராகவும், சோமனூர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் இருந்தார்.
இந்த நிலையில் இவர் கடந்த 19-ந் தேதி திடீர் உடல்நிலை குறைவால் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் காலமானார்.
இந்த தகவல் விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாளுக்கு தெரிவித்தனர்.
கணவர் இறந்த செய்தி
கணவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த கருப்பாத்தாள்...தன்னிலை இழந்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர்ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின்பே பழனிச்சாமியின் உடல் செந்தில்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரது மனைவி கருப்பாத்தாள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனடியாக அவரது உடலும் அவர்களது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இருவரின் உடல்களும் ஒரே வாகனத்தில் ஏற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் சங்க நிர்வாகிகள், விசைத்தறி உரிமையாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கணவன் இறந்த நிலையில் அதனை கேட்டு மனைவியும் இறந்த சம்பவம் சோமனூர் பகுதியில் உள்ள அனைத்து தரப்பினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.