வங்கியில் ரூ.17 லட்சம் கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர் கைது
காட்பாடியில் தேசிய வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ.17 லட்சம் கடன்பெற்று மோசடி செய்த தம்பதியினரை வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வங்கியில் ரூ.17 லட்சம் கடன்
காட்பாடி மிஷன் சர்ச் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 51). இவருடைய மனைவி பேபி (50). இந்த தம்பதியினர் காட்பாடியில் காய்டெக் என்ற பெயரில் டிஜிட்டல் பேனர் கடை நடத்தி வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் ரவிச்சந்திரன், பேபி ஆகியோர் ரவிச்சந்திரன் பெயரில் உள்ளதாக வீட்டுடன் கூடிய இடத்தின் ஆவணங்களை கொடுத்து ரூ.17 லட்சம் தொழில் கடன் பெற்றுள்ளனர்.
கடன் பெற்று சில ஆண்டுகள் ஆன பின்னரும் அதற்கான வட்டி செலுத்தவில்லை. இதுகுறித்து அவர்களுக்கு வங்கியில் இருந்து கடிதம் மூலம் நினைவூட்டப்பட்டது. அதன்பின்னரும் அவர்கள் கடனை செலுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதற்கிடையே ரூ.17 லட்சம் கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.37 லட்சமாக உயர்ந்தது. ரவிச்சந்திரன், பேபி ஆகியோர் கடனை வட்டியுடன் செலுத்தாததால் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரன் வீட்டுடன் கூடிய சொத்தை ஏலம் விட்டது. அதனை காதர்அலி என்பவர் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
கணவன்-மனைவி கைது
பின்னர் அவர் அந்த இடத்தை தனது பெயரில் பதிவு செய்வதற்கு முயற்சித்துள்ளார். அப்போது அந்த இடம் ரவிச்சந்திரன் அம்மா பெயரில் இருப்பதும், கடந்த 2009-ம் ஆண்டு ரவிச்சந்திரன் தனது அம்மாவிற்கு தான செட்டில்மெண்ட் செய்ததும், பழைய ஆவணங்களை வைத்து வங்கியில் முறைகேடாக கடன் பெற்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து காதர்அலி காட்பாடியில் உள்ள தேசிய வங்கி மண்டல மேலாளர் அலுவலகத்துக்கு தெரிவித்தார்.
இதையடுத்து இதுதொடர்பாக மண்டல மேலாளர் மாதவராவ் மத்து என்பவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனிடம் புகார் மனு அளித்தார். அதன்பேரில் அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், ரவிச்சந்திரன், பேபி ஆகியோர் வங்கியில் போலி ஆவணங்களை கொடுத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தத. இதையடுத்து போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர்.