மொபட் மீது மினி பஸ் மோதியதில் நாட்டு வைத்தியர் பலி

தட்டார்மடம் அருகே மொபட் மீது மினி பஸ் மோதியதில் நாட்டு வைத்தியர் பலியானார்.

Update: 2022-12-29 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே மொபெட் மீது மினி பஸ் மோதியதில் நாட்டு வைத்தியர் பரிதாபமாக பலியானார். தப்பிஓடிய மினிபஸ் டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

நாட்டு வைத்தியர்

சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் பாலசிங் (வயது 75). நாட்டு வைத்தியர். இவர் நேற்று சாயர்புரத்தில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து அவர் மொபெட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

முதலூர் மதுபான கடை அருகில் அவர் வந்து கொண்டிருந்தபோது, சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி சென்ற மினி பஸ் மொபெட் மீது மோதியது. இதில் ெமாபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட பாலசிங் பலத்த காயமடைந்தார். அவர் மீது மோதிய மினி பஸ் நிற்காமல் சென்றுவிட்டது.

சாவு

சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்பஸ் டிரைவரை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்