வரவு செலவு கணக்கு நகல் வழங்க வேண்டும்
ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்கு நகல் வழங்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சோளிங்கர் நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரீத்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 8-வது வார்டு உறுப்பினர் கோபால் பேசுகையில் சோளிங்கர் நகராட்சியில் ஒப்பந்த முறையில் தூய்மை மற்றும் திடக் கழிவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். தற்போது பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்க வேண்டும். நகராட்சி கட்டுமான பணிகளை மேற்பார்வையிட நிரந்தர பொறியாளரை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வரவு செலவு கணக்கு குறித்து நகர மன்ற உறுப்பினருக்கு நகல் வழங்க வேண்டும், நகராட்சிக்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது புள்ளி பட்டியலை நகர மன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்து ஒப்புதல் பெற்று பொருட்களை வாங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அப்போது செய்தி சேகரித்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களை வெளியே செல்லுங்கள் என நகராட்சி தலைவரின் கணவரும், நகராட்சி உறுப்பினருமான அசோகன் கூறினார். ஆணையர் பிரீத்தியும் பத்திரிகையாளர்களை வெளியே செல்லுமாறு கூறினார்.