சேலத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய கட்டிட தொழிலாளி
சேலத்தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியரை தாக்கிய கட்டிட தொழிலாளியிடம் போலீாசர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்ககிரி,
சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 57). இவர் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் ராமலிங்கம் பணி செய்துகொண்டு இருந்தபோது, கிடையூர் மேட்டூர் கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி அஜீத் (23) என்பவர் குடிபோதையில் அங்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், ராமலிங்கத்தை பார்த்து அவதூறாக பேசி திட்டியதுடன், எனது மனைவியை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எதுக்கு அனுப்பி வைத்தீர்கள் எனக்கூறி ராமலிங்கத்தின் கன்னத்தில் அஜீத் தாக்கி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ராமலிங்கம் சங்ககிரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.