திருவொற்றியூரில் கட்டுமான நிறுவன அதிகாரியை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்; 5 பேர் கைது
கட்டுமான நிறுவன அதிகாரியை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வக்கீல் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கட்டுமான நிறுவன அதிகாரி
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பாண்டியன் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). இவர், பள்ளிக்கரணையை சேர்ந்த மணிகண்டன் என்பவரது கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். இந்த கட்டுமான நிறுவனம், திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியில் எண்ணூர் விரைவு சாலையில் கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறது. அங்கு அய்யப்பன் கட்டிட வேலைகளை கவனித்து வந்தார்.
காரில் கடத்தி மிரட்டல்
கடந்த 14-ந் தேதி சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவுடி அய்யா கார்த்திக் (42) என்பவர் 5 பேருடன் சேர்ந்து அய்யப்பனை காரில் கடத்திச்சென்று கத்திமுனையில் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினார். பின்னர் அவரை சென்டிரல் ெரயில் நிலையம் அருகில் இறக்கிவிட்டு அனைவரும் தப்பிச்சென்றனர்.இது குறித்து அய்யப்பன் கொடுத்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
5 பேர் கைது
இந்தநிலையில் போலீசார் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக ரவுடி அய்யா கார்த்திக், ராயபுரம் ஆஞ்சநேயர் நகரைச் சேர்ந்த வேணுகோபால் (25), ராயபுரம் பகுதியைச் சேர்ந்த வக்கீல் வெங்கட்ராஜ் (30), லட்சுமிபதி (27) உள்பட 5 பேரை கைது செய்தனர். போலீசார் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.