ஆற்றை கடக்க கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும்
பொன்னானி அருகே ஆற்றை கடந்து செல்ல கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பொன்னானி அருகே ஆற்றை கடந்து செல்ல கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொதுமக்கள் சிரமம்
பந்தலூர் தாலுகா பொன்னானி அருகே குன்றில்கடவு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், ரேஷன் பொருட்கள் பெறவும் பொன்னானிக்கு வந்து செல்கின்றனர். குன்றில்கடவில் இருந்து பொன்னானிக்கு நடைபாதை செல்கிறது. இதன் குறுக்கே ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடந்து செல்ல பொதுமக்கள் மூங்கில் பாலம் அமைத்து உள்ளனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலம், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அடித்து செல்லப்படுகிறது. அந்த சமயங்களில் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்ல வழியில்லாமல் கடும் சிரமம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் மூங்கில் பாலத்தின் மீது நடந்து செல்லும் போது, தவறி ஆற்றுக்குள் விழும் அபாயம் உள்ளது.
கான்கிரீட் பாலம்
மேலும் ஆறு முடியும் இடத்தில் இருந்து பொன்னானி வரை மண் பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, சிறிது தூரம் நடைபாதை அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஆறு வரை மோசமான நிலையில் உள்ளது. இதனால் மூங்கில் பாலம் உள்ள பகுதியில் கான்கிரீட் பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆற்றை கடக்க மூங்கில் பாலத்தை பயன்படுத்துகின்றனர். ரேஷன் பொருட்களை தூக்கி கொண்டு வரும் போது, தவறி ஆற்றுக்குள் விழும் நிலை உள்ளது. கான்கிரீட் பாலம் அமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கான்கிரீட் பாலம் மற்றும் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.