நகை-பணம் பெற்று மோசடி செய்ததாக தம்பதி மீது புகார்

நகை-பணம் பெற்று மோசடி செய்ததாக தம்பதி மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-22 19:39 GMT

பெரம்பலூர் அருகே எளம்பலூர் சமத்துவபுரத்தை அடுத்த சோமண்டாபுதூர் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன்(வயது 49). விவசாயியான இவர் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த 2018-ம் ஆண்டில் எங்களது நிலத்திற்கு அருகே உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒரு தம்பதி குத்தகைக்கு எடுத்து, வீடு எடுத்து தங்கி சாகுபடி செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள், எனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகியதால், அந்த பழக்கத்தை வைத்து கடந்த 2018-ம் ஆண்டில் என்னிடம் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக ரூ.94 ஆயிரம் பெற்றனர். மேலும் அவசர உதவிக்காக பணம் தேவைப்படுவதாக கூறியதால், சுமார் 10½ பவுன் நகைகளை அவர்களிடம் கொடுத்தேன். அந்த நகைகளை அடகு வைத்து பணம் பெற்று தங்களது செலவிற்காக அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

ஒருமாதத்திற்குள் நகைகள் மற்றும் ரூ.94 ஆயிரத்தை திரும்ப தருவதாக கூறினார். ஆனால் ரூ.24 ஆயிரம் மட்டுமே திருப்பி தந்தனர். மீதமுள்ள ரூ.70 ஆயிரம் மற்றும் 10½ பவுன் நகைகளை பல மாதங்கள் ஆகியும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த தம்பதியிடம் பலமுறை கேட்டும் பணம் மற்றும் நகையை திருப்பி தராமல், என்னை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிவிட்டனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளேன். இதற்கிடையே அந்த தம்பதி கடனாக பெற்ற பணம் மற்றும் நகைகளை 2 மாதத்திற்குள் திருப்பி தந்துவிடுவதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அதன்பின்னர் 5 மாதத்திற்கு மேலாகியும் கடன் மற்றும் நகைகளை அவர்கள் திருப்பி தரவில்லை. ஆகவே அந்த தம்பதி உரிய விசாரணை நடத்தி பணம் மற்றும் நகைகளை திருப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் சூப்பிரண்டு, இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி, பணம், நகைகளை ஒப்படைக்க வழிவகை செய்யுமாறு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்