கண் கண்ணாடி கடையின் சேவை குறைபாடு: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

கண் கண்ணாடி கடையின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2023-03-30 21:32 GMT

நாகர்கோவில்:

கல்குளம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் தாமரைலிங்கம். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையின் கண்ணாடி கடையில் ரூ.5,700 செலுத்தி கண் கண்ணாடி ஒன்று வாங்கியுள்ளார். அப்போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட விளம்பரத்தை கடையில் இருந்தவர்கள் வழங்கியுள்ளனர். பின்னர் பணம் செலுத்தி கண்ணாடியை பெற்றுக் கொண்ட தாமரைலிங்கம் விளம்பரத்தின்படி மற்றொரு கண்ணாடியை இலவசமாக வழங்குமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர்கள் விளம்பரம் லென்சுக்கு மட்டும் தான் பொருந்தும். கண்ணாடி பிரேமிற்கு கிடையாது என்று சொல்லி வழங்க மறுத்து விட்டனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தாமரைலிங்கம் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் கண் கண்ணாடி கடையின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய லென்ஸ் மற்றும் கண்ணாடியை கொடுப்பதோடு, ரூபாய் 10 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.2,500 ஆகியவற்றையும் ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்