பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை குழு அமைத்து உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை கோரிக்கை

பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை குழு அமைத்து உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-11-10 15:51 GMT

சென்னை,

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு பக்கம் பட்டாசு தயாரிப்பில் நாம் முன்னோடியாக திகழ்கிறோம் என்று பெருமைப்பட்டாலும் இதுபோன்ற விபத்துகள் வேதனை அளிக்கிறது.

திமுக அரசு உடனடியாக ஒரு குழுவை நியமித்து, பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது தமிழக பாஜகவின் கோரிக்கை." என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்