4 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட்-கணபதிபாளையம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம் வழியாக கேரளா மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக மாசாணியம்மன் கோவில், வால்பாறை, அழியார் உள்ளிட்ட சுற்றுலாதலங்களுக்கு தினசரி ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் முதல் கணபதிபாளையம் வரை 4 வழிசாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நேற்று ஆனைமலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ், செயற்பொறியாளர் உசேன், திவான்சாபுதூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் மற்றும் பசுமை குழு உறுப்பினர்கள் கள ஆய்வு செய்தனர்.
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் முதல் கணபதிபாளையம் வரை வெப்பாலை மரம், பனைமரம், வாகை மரம், உள்ளிட்ட அரிய வகையான 377 மரங்கள் உள்ளன. இதில் உள்ள மரங்களை எத்தனை மரங்களை அப்புறப்படுத்தலாம், மரங்களில் கிளைகள் வெட்டலாம், மரங்களை மறு நடவு செய்யலாம் என கள ஆய்வு செய்து முடிவில் தெரிவிக்கப்படும். மேலும் 4 வழி சாலை அமைப்பதற்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.