பெற்றோர் இறந்ததால் கல்லூரி மாணவர்விஷம் குடித்து தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே பெற்றோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் மனம் உடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-16 20:39 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே பெற்றோர் அடுத்தடுத்து இறந்த நிலையில் மனம் உடைந்த கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பெற்றோர் அடுத்தடுத்து இறப்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வேப்பங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயி. இவரும், இவரது மனைவியும் உடல் நலக்குறைவு காரணமாக அடுத்தடுத்து இறந்தனர்

இவர்களது மகன்கள் வீரஅரசன்(வயது 26) மற்றும் கேசவராமன்(24) ஆகிய இருவரும் அதே ஊரில் உள்ள அவர்களுடைய தாய் மாமா வீட்டில் தங்கி இருந்தனர். இவர்களில் வீரஅரசன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

கல்லூரி மாணவர் தற்கொலை

தனது பெற்றோர் இறந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த வீரஅரசன் சம்பவத்தன்று கரையான் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் மயக்கம் அடைந்த அவரை பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வீர அரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

ஏற்கனவே தனது பெற்றோரை இழந்து பரிதவித்து வந்த கேசவராமன் தனக்கு ஆதரவாக இருந்த சகோதரனையும் இழந்து விட்டதால் அவரது உறவினர்களும், நண்பர்களும், கிராம மக்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்