குறைந்த விலைக்கு கார் தருவதாக கூறிகல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
குறைந்த விலைக்கு கார் தருவதாக கூறி கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.1.¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் பிரதீப்குமார் (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதியன்று தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அதில் குறைந்த விலைக்கு கார் விற்பனை என்று இருந்த ஒரு லிங்கை தொட்டதும் வாட்ஸ்-அப் மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து தொடர்புகொண்ட நபர் ஒருவர், பிரதீப்குமாரிடம் பேசினார்.
அப்போது அந்த நபர், தான் இந்திய ராணுவத்தில் ஐதராபாத்தில் பணி செய்வதாகவும், பணிமாறுதலில் ஜம்முகாஷ்மீர் செல்வதால், தான் பயன்படுத்தி வரும் காரை விற்பனை செய்ய உள்ளதாகவும், அதற்காக டெலிவரி கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தினால் காரை, ராணுவ பார்சல் மூலம் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
ரூ.1.42 லட்சம் மோசடி
இதை உண்மையென நம்பிய பிரதீப்குமார், தான் கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தினார். பின்னர் அந்த நபர், பிரதீப்குமாரை தொடர்புகொண்டு தன்னுடைய காரை திண்டிவனம் எடுத்து வந்து விட்டதாகவும், இன்சூரன்ஸ், ஜி.எஸ்.டி. வரியாக பணம் கட்டினால்தான் காரை டெலிவரி செய்ய முடியும் எனக்கூறினார். உடனே பிரதீப்குமார், தான் கணக்கு வைத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்தையும், தனது சகோதரரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.38 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 800-ஐ அந்த நபர் அனுப்பச்சொன்ன கூகுள்பே எண்ணுக்கு 7 தவணைகளில் அனுப்பி வைத்தார்.
அதைப்பெற்ற அந்த நபர், பிரதீப்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு மேலும் அதிக பணம் கொடுத்தால்தான் காரை டெலிவரி செய்ய முடியும் எனக்கூறி பிரதீப்குமாரை ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.