பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்தார்
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நேற்று கல்லூரி முடிந்து மாணவ-மாணவிகள் பஸ்சிற்காக காத்து நின்றனர். அப்போது அந்த வழியாக கும்பகோணத்தை நோக்கிச் செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. அதில் மாணவ-மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏறி பயணம் செய்தனர். அந்த பஸ் சிறிது தூரம் சென்றபோது பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3-ம் ஆண்டு படித்துவரும் மாணவர் அருண் எதிர்பாராத விதமாக படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால், பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மாணவனின் காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பஸ் 30 நிமிடம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.