ஓடும் பேருந்தில் டிரைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்த கல்லூரி மாணவி

சிறிது தூரம் தள்ளிச்சென்று பேருந்தை நிறுத்திய டிரைவர் மாணவியை இறக்கிவிட்டார்.

Update: 2024-04-11 02:31 GMT

கோப்புப்படம் 

கோயம்பேடு,

சென்னை தி.நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி சென்ற அரசு பேருந்தில் நெற்குன்றத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் பயணம் செய்தார். நெற்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோதும், கல்லூரி மாணவி இருக்கையில் இருந்து எழுந்து வராமல் இருந்ததாக தெரிகிறது. இதனை கவனித்த கண்டக்டர், பேருந்தை நிறுத்தினால்தான் எழுந்து வருவாயா? என கேட்டார். உடனே மாணவி, பேருந்தின் முன்புற படிக்கட்டு வழியாக இறங்க சென்றார். இதனை கவனித்த டிரைவரும், நிறுத்தம் வருவதற்குள் எழுந்து வரவேண்டியது தானே? என கேட்டார். இதனால் டிரைவருக்கும், மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த மாணவி, அரசு பேருந்து டிரைவரின் கன்னத்தில் பளார் என அறைந்ததாகவும், பதிலுக்கு டிரைவரும் மாணவியின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. ஓடும் பேருந்தில் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது தூரம் தள்ளிச்சென்று பேருந்தை நிறுத்திய டிரைவர் மாணவியை இறக்கிவிட்டார்.

இது குறித்து கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் அரசு பஸ் டிரைவர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்