போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி விவசாயியுடன் தஞ்சம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி விவசாயியுடன் தஞ்சம் அடைந்தார். 1 மணி நேரம் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டமும் தோல்வியில் முடிவடைந்தது.

Update: 2023-07-13 18:45 GMT

நாகர்கோவில்:

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி விவசாயியுடன் தஞ்சம் அடைந்தார். 1 மணி நேரம் பெற்றோர் நடத்திய பாசப்போராட்டமும் தோல்வியில் முடிவடைந்தது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு

பூதப்பாண்டி அருகே உள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 25). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஏசுதாஸ் மகள் பிளஸ்சியா (20), நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் அரசல், புரசலாக மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பிளஸ்சியாவை கண்டித்தனர். ஆனால் கண்ணன் மீதான காதலால் பெற்றோர் பேச்சை பொருட்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து பிளஸ்சியாவை ஆசாரிபள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர். இந்த கெடுபிடியை தொடர்ந்தும் அவர் செல்போனில் கண்ணனுடன் பேசி காதலை வளர்த்தார்.

காதல் ஜோடி தஞ்சம்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மாணவி பிளஸ்சியா திடீரென மாயமானார். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பிளஸ்சியாவை பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் எங்கும் இல்லை. பின்னர் இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரில் கண்ணன் பிளஸ்சியாவை கடத்தி சென்றதாக கூறியிருந்தனர்.

இந்தநிலையில் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் நேற்று காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது. அப்போது இருவரும் ஓராண்டாக காதலித்து வந்ததாகவும், இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவி மற்றும் கண்ணனின் பெற்றோர் போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

பாசப்போராட்டம் தோல்வி

அப்போது மாணவியின் பெற்றோர், தங்களுடன் வரும்படி பிளஸ்சியாவை அழைத்தனர். இவ்வாறாக 1 மணி நேரம் பாசப்போராட்டம் நடத்தியும் பிளஸ்சியாவோ கண்ணனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார். இதனால் பெற்றோருக்கு மகள் மீது கோபம் உருவானது.

இனி தங்களுக்கும், மகள் பிளஸ்சியாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே அவர் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கொடுக்கும்படி பெற்றோர் தெரிவித்தனர். உடனே பிளஸ்சியா தான் அணிந்திருந்த 3 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் காதலனுடன் செல்ல பிளஸ்சியாவை அனுமதித்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயியுடன் கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்