அல்லேரி மலைப்பகுதியில் 6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த கலெக்டர்

அணைக்கட்டு அருகே அல்லேரி மலைக்கிராமத்தில் பாம்பு கடித்தவர் பாதை வசதி இல்லாததால் இறந்ததை தொடர்ந்து நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் 6 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

Update: 2023-07-27 17:52 GMT

பாம்பு கடித்து சாவு

அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அல்லேரி மலை கிராமத்தையொட்டி உள்ள ஆட்டுக்காரன்தொரை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பு கடித்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

அதனால் சங்கர் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சாலை வசதி இருந்திருந்தால் சங்கர் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனக் கூறி சாலை வசதி வேண்டி மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

நடந்து சென்று ஆய்வு

வரதலம்பட்டு பகுதியில் இருந்து அல்லேரி மலைக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சாலை அமைப்பதற்கு திட்ட மதிப்பீடுகள் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டிருந்தன. அதற்காக அளவிடும் பணிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் அல்லேரி மலையில் சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

வாகனம் செல்ல முடியாத பகுதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாம்பு கடித்து இறந்த சங்கரின் குடும்பத்திற்கு மாவட்ட கலெக்டர் நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

தங்கி பணிபுரிய நடவடிக்கை

அல்லேரி மலைப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மருத்துவர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாகங்கள் என துறை சார்ந்த அலுவலர்கள் அங்கேயே தங்கி பணிபுரிவதற்காக குடியிருப்புகள் கட்டுவதற்கான இடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுதாகரன், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்